Thursday, March 7, 2013

சிலம்பம் சிலம்பம் சிலம்பம் சிலம்பம்



                      சிலம்பம்

RAJAMANGADU


     சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டுஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்திவிலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாகவளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளாஉள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.
சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.
சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை,விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில்கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.
சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய]] முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒருகடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது.திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.
நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான கட்டபொம்மன் கதைப்பாடலில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினான் என்பதை
"கொட்டுக்கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும்
கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே;
சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள்
தட்டிவிட்டான் அங்கே பாரதன் வல்லை"
என்ற கும்மிப் பாடல் மூலம் அறியலாம்.
மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளகும். ஒருவர் சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் இவற்றைக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம்.

மெய்ப்பாடம்

மெய்ப்பாடம் என்பது சிலம்பக் கலையின் முதலாவது பயிற்சியாகும்., உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து உடல் தகுதியை அடைவது மெய்ப்பாடம்.

உடற்கட்டுப்பாடம்

குறிப்பிடத்தகுந்த வலிமையை உடலுக்கு ஏற்படுத்தவும், உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்தவும் கற்பிக்கப்படுவது உடற்கட்டுப் பாடம் ஆகும். இது இரண்டாம் நிலைப் பயிற்சியாகும்

மூச்சுப்பாடம்

மூச்சுப்பாடம் என்பது மூன்றாவதாக இடம் பெறும் பயிற்சியாகும். கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு மூச்சுப்பாடம் கற்பிக்கப்படுகிறது.. ஒருவர் மெய்ப்பாடம், உடற்கட்டுப் பாடம் மற்றும் மூச்சுப்பாடம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது. தனக்கு விருப்பமுள்ள கூடுதல் பாடங்களைப் பயில வழி வகுக்கிறது.

குத்துவரிசை


சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக குத்துவரிசை அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியைக் கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும். குத்துவரிசையின் நுணுக்கமாக, நிற்கும் நிலைகளை எப்படி இலாகவமாக மாற்றிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். கிட்டத்தட்ட, அறுபத்து நான்கு விதமான நிலைகள், புலி, யானை, பாம்பு, கழுகு, குரங்கு ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக் கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும்.

தட்டுவரிசை

ஒருவர் குத்துவரிசை பயிலும் போதே தட்டுவரிசையையும் கற்றுக் கொள்ளலாம். மறுநிலையில் இருப்பவர் குத்துக்களைத் தம்மீது பாய்ச்சும் போது, அவற்றை அவர்தம் நிலைக்கேற்பத் தன்நிலையை மாற்றித் தட்டிவிடுதல் என்பதே தட்டுவரிசையாகும்.

பிடிவரிசை

எதிரி தம்மைத் தாக்க வரும் போது, எதிரியை எப்படி இலாகவமாகத் தம்பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை என்பதாகும். சிலம்பாட்டத்தின் இக்கூறானது, யானைகளிடம் இருந்து வகுக்கப்பட்ட ஒன்றாகும். யானைகள் ஒன்றுக்கொன்று பிடி போட்டுக்கொள்ளும் போது, கிட்டத்தட்ட இருநூறு வகையான பிடிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை யாவும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளன.

அடிவரிசை

ஏதாகிலும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளைச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்தலை வரிசைப்படுத்துவதே அடிவரிசை என்பதாகும். சிலம்புக்கலையின் இக்கூறானது குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். அடிவரிசையில் கற்றுத் தேர்ந்த ஒருவர் அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சியடையலாம்.[5] சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய்ச் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்ற வரிசை முறைகள் உள்ளன.
சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன
·         துடுக்காண்டம்
·         குறவஞ்சி
·         மறக்காணம்
·         அலங்காரச் சிலம்பம்
·         போர்ச் சிலம்பம்
·         பனையேறி மல்லு
·         நாகதாளி,
·         நாகசீறல்,
·         கள்ளன்கம்பு
ஆகியனவாகும்.


சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை, கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு ,மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும்.
·         ஒற்றைச் சிலம்புத்தடி கொண்டு இரு கைகளில் பிடித்துச் சுழன்றாடுவது,
·         இரண்டு ககைகளிலும் இரண்டு சிலம்பத்தடி கொண்டு ஆடுவது
என இரு முறைகளும் இதில் உண்டு.

ஆயுதப் பிரிவுகள்

சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன.ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரிவீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.

கராத்தேவும் சிலம்பமும்

கராத்தே என்ற பெயரிலும் "கரம்' என்ற சொல் மூலமாக உள்ளது. கரம் என்பது 'கை' எனப் பொருள்படும்கராத்தே வீரக் கலையின் தாய் குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர்மன், போதி தர்மன் புத்த துறவிகளுக்கு இக்கலையைக் கற்றுக் கொடுத்தார் எனக் கூறுவர். கராத்தே என்ற வீர விளையாட்டின் "கடா' (kata)என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசை காரணமாகச் சொல்லப்படுகிறது. கதம்பவரிசை மற்றும் கடா இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றேபோல் இருக்கும் 

சிலம்பப் போட்டி

தமிழர்களின் போர் முறையாகவும் தற்காப்புக் கலையாகவும் திகழ்ந்த சிலம்பாட்டம் மத்திய காலங்களில் திருவிழாக்களில் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. தற்போது இக்கலையானது வீர விளையாட்டாக மாறி போட்டிகளிலும் பங்கு பெறும் அளவில் வளர்ந்துள்ளது[12]. சிலம்பம் தனி ஒருவராகவோ அல்லது இருவராகவோ அல்லது பலருடனோ ஆடப்படுகிறது. தனி ஒருவர் ஆடிக் காட்டுவது 'தனிச்சுற்று' எனப்படும். சிலம்பம் இருவர் போட்டியிடும் விளையாட்டாக நடைபெறுவதும் உண்டு. இது தற்காப்புக் கலை.

சிலம்பம் கலை பயிற்றுவித்தல்

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை , மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது.

பயன்கள்

சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும்இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக்(தடியை) கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.

உசாத்துணை

·         ஜே. டேவிட் டேனியல் ராஜ், சிலம்பம் - அடிமிறைகளும் வரலாறும், காரைக்குடி அழகப்பர் கல்லூரி வெளியீடு, 1971
·         ஞா. தேவநேயப் பாவாணர், பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், 1966
·         டாக்டர் இரா. நாகசாமி, கல்வெட்டுக் காலாண்டிதழ், தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை வெளியீடு, ஏபரல் 1974
·         டாக்டர் . என். பெருமாள், தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
·         வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏடான 'அருவி' இதழில் வெளியான கட்டுரை பக். 3-4.





by 
thanks to  ta.wikipedia.org.....